தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் பேரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம் தொடர்பாக அரசாணைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வந்தவாசி நகராட்சியுடன் பாதிரி கிராமம், கீழ் சாத்தமங்கலம், சென்னாவரம், அமையப்பட்டு மற்றும் செம்பூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
முன்னதாக, மாவட்ட ஆட்சியரின் செயற்குறிப்பில், "வந்தவாசி நகராட்சியுடன் கீழ் சாத்தமங்கலம், சென்னாவரம், பாதிரி, அமையப்பட்டு மற்றும் செம்பூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுவதால் நகராட்சியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் சேவைகள் இப்பதிகளுக்கு கிடைக்கும். இதன் மூலம் இம்மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதோடு சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கும். மேலும் இந்த ஊராட்சிகள் நகராட்சிக்குரிய அனைத்து விதமான நகர்புற பண்புகளையும் கொண்டுள்ளன. மேற்குறிப்பிட்ட ஐந்து ஊராட்சிகளை வந்தவாசி நகராட்சியுடன் இணைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது" தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேலே உள்ளவரான மாவட்ட ஆட்சித் தலைவர்களின் செயற்குறிப்புகளை பரிசீலனை செய்து வந்தவாசி நகராட்சி உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் முறையே குறிப்பிடப்பட்டுள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளை இணைத்து நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்ய உத்தேச முடிவு மேற்கொண்டு அரசு அவ்வாறே ஆணையிடுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த என்ன..?
இதன் அடிப்படையில் விரிவுப் படுத்தப்படும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள வந்தவாசி நகராட்சிக்கான வார்டு எண்ணிக்கை மறு நிர்ணயம் செய்யப்பட்டு வார்டு எல்லைகள் வரையற செய்யப்பட்டு நகராட்சி மன்றங்களுக்கான அடுத்த பொது தேர்தல் நடத்தப்படும்.
விரிவாக்கம் தொடர்பான அரசாணையை செயல்படுத்துவது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தப்படப்பட்டுள்ளது.
ஏன் இந்த விரிவாக்கம் ?
தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் படி, வந்தவாசி நகராட்சி உடன் 5 ஊராட்சிகள் இணைக்கப்படுவது உட்பட தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் நகரங்களுடனான கிராம ஊராட்சிகளின் இணைப்புக்கான அரசு தரப்பிலான விளக்கம் மற்றும் காரணம் பின் வருமாறு:
* மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற பெரியளவிலான நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளைச் சுற்றி அமைந்துள்ள ஊராட்சிகள் / பேரூராட்சிகள் போன்றவை நகரங்களின் / பெருநகரங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ளதுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் பலவும் இவற்றில் அமைந்துள்ளன.
* இப்பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஏராளமானோர் அருகிலுள்ள நகர்ப்புர பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் குடியிருந்து வருகின்றனர்.
* மேற்கண்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கும், திட்டமிட்ட வளர்ச்சிக்கும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது. இதன் மூலம் தொடர்புடைய பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
* மேலும், மாநகராட்சி/ நகராட்சி/ பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரகப்பகுதிகள் நகர்ப்புர பகுதிகளுக்கு சமமாக வளர்ந்து வருகின்றன. எனவே நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கும், நகர்ப்புரங்களுக்கு இணையான வகையில் சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை, பொது/சமுதாய பயன்பாட்டிற்கான நவீன கழிப்பிடங்கள், பாதாளச் சாக்கடை கட்டமைப்பு, ஆற்றல்மிகு தெருவிளக்குகள் போன்ற மக்களுக்கான இன்றியமையாத அடிப்படை வசதிகளை விரிவுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
* இவற்றோடு, வேகமாக நகரமயமாகிவரும்/வளச்சியடைந்துவரும் பெரும்பாலான சிறிய உள்ளாட்சி அமைப்புகளால் மக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதி மற்றும் இடப்பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு வசதி திட்டங்களை நிறைவேற்றுதல் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிப் பணிகள்/ சேவைகளுக்கான விரைவான, திறம்பட்ட செயலாக்கத்திற்கான பொறியாளர்கள் உள்ளிட்ட தேவையான பணியமைப்பு குறைந்த அளவிலேயே உள்ளது போன்றவற்றை களையவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது.
* இதன்மூலம், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குடியிருக்கும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளும் மக்களுக்கு கிடைக்க ஏதுவாகும்.
* இம்மேம்பாட்டினால், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் புதிய தொழிலகங்கள் ஏற்படவும், வேலைவாய்ப்பு உருவாகவும், வருவாய் பெருகவும், அனைத்து தரப்பு வளர்ச்சிக்கும் ஏதுவாகும்.
* அரசு, நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புரத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல்/மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
* தற்போது, 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 05.01.2025ஆம் தேதியன்று நிறைவடைகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புரத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கவும், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு தொடர்பான உயர்நிலைக்குழு, மாவட்ட ஆட்சியர்களுடன் மேற்கொண்ட தொடர் ஆலோசனைகளின் அடிப்படையில், உரிய செயற்குறிப்புகள் பெறப்பட்டுள்ளன.
* அரசு, இச்செயற்குறிப்புகளை பரிசீலித்து, பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம், வந்தவாசி, திருவத்திபுரம், ஆரணி உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தக்க சட்டவகைமுறைகளின் கீழ் ஆணைகள் வெளியிடப்பட்டு, உரிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
* இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான தரமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அளித்திடும் நோக்கத்தை சிறப்பான முறையில் எய்திடும் வகையில், தொடர்ச்சியாக அமைந்துள்ள பகுதிகளை (contiguous areas) ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட வளர்ச்சிக்கான அனைத்து ஆதாரங்களும் சரியான அளவில் பயன்படுத்தப்படும் வகையில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கான ஒட்டுமொத்த திட்டமிடுதலை மேற்கொள்ளவும், இடஞ்சார்ந்த திட்டமிடல் (spatial planning) உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஒருங்கிணைத்தல் / திறம்பட செயலாக்குதல் மூலம் திட்டமிடப்பட்ட நகர்ப்புர வளர்ச்சியை நெறிமுறைப்படுத்தவும் ஏதுவாகும்.
* நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின் பேரில் ஐந்து அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இவ்வரசாணைகள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
* அரசு, நகரமயமாக்கலின் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், சீரான நகர்ப்புர வளர்ச்சி, செம்மையான நிருவாகம் ஆகியவற்றை உறுதிசெய்ய தேவையான இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.