நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஜனவரி 8-ந் தேதி தொடக்கம்: திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் முன்பதிவு செய்து பயன்பெறலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், சம்பா பருவத்திற்கு முதல் கட்டமாக 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற ஜனவரி 8-ந் தேதி முதல் தொடங்குகிறது என்றும், 6-ந் தேதி முதல் விவசாயிகள் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின் வருமாறு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டு சம்பா பருவத்திற்கு முதல்கட்டமாக 62 மையங்கள் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (Direct Purchase Centres (DPC)) வருகிற ஜனவரி 8-ந் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான இணையவழி முன்பதிவு 6-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?
விவசாயிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்து பயன் பெறலாம். இதற்காக 6-ந் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது. விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்றினையும், உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்றினை அடங்கலில் பெற வேண்டும்.

நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடி கொள்முதல் மையத்திற்கு மேற்குறிப்பிட்ட சான்றுகள், ஆதார், சிட்டா மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை நேரில் கொண்டு சென்று இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

செல்போனில் எஸ்.எம்.எஸ். வரும்: 
நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவுகள் மேற்கொண்ட பின்னர் சம்பந்தப்பட்ட விவசாயியின் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது என்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு அவரால் பதிவு செய்துள்ள விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல், நிராகரிப்பு செய்யப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு சென்று நெல் அளிக்க வேண்டும்.

உதவி எண்கள்:

விவசாயிகள் முன் பதிவு செய்வதில் சந்தேகம் சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற கால தாமதம் அல்லது சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) மற்றும் 6385420976 (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தெரிவித்தால் அவை உடனடியாக சரி செய்யப்படும்.

எனவே விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி தங்களின் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் விவரம்:

திருவண்ணாமலை: காடகமான், அண்டம்பள்ளம், கருத்துவாம்பாடி, பெரியகிளாம்பாடி.

வந்தவாசி: மருதாடு, கீழ்குவளைவேடு, கீழ்சீசமங்கலம், எரமலூர், கொவளை, நல்லூர், மழையூர், தென்னாத்தூர், பொன்னூர், வல்லம், பெரணமல்லூர்.

செய்யாறு: பாராசூர், மேல்சீசமங்கலம், பெருங்களத்தூர், கடுகனூர், நாவல்பாக்கம், புளியரம்பாக்கம், தவசிமேடு, ஆக்கூர், ஆலத்தூர், எச்சூர், உட்கல், முளகரிப்பாட்டு, வாச்சனூர்.

கீழ்பென்னாத்தூர்: அணுக்குமலை, சோமாசிபாடி.

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு, மேல்கரிப்பூர்.செங்கம் தாலுகாவில் அன்வராபாத், காரியமங்கலம், அரட்டவாடி, பனைஓலைப்பாடி, கண்ணக்குருக்கை, மேல்முடியனூர், எறையூர்.

கலசபாக்கம்: எலத்தூர், கடலாடி, ஆதமங்கலம்.

போளூர்: எடப்பிறை, ஆர்.குன்னத்தூர், மண்டகொளத்தூர்.

சேத்துப்பட்டு: நம்பேடு, நெடுங்குணம், மேல்சாத்தமங்கலம், செம்மம்பாடி. ஆரணி தாலுகாவில் அரியாப்பாடி, தச்சூர்.

வெம்பாக்கம்: வெம்பாக்கம், நாட்டேரி, பிரம்மதேசம், அழிவிடந்தாங்கி, பெருங்கட்டூர், குத்தனூர், தென்னம்பட்டு, கீழ்நெல்லி, சிறுநாவல்பட்டு, தூசி, அரியூர்.

புதியது பழையவை