செய்யாறு: லோடு ஆட்டோவில் வந்து பழைய இரும்பு கடையில் திருடிய 4 பெண்கள்.. 2 பேர் கைது - 2 பேருக்கு வலைவீச்சு

செய்யாறில் உள்ள ஆற்காடு சாலையில் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள  பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் கடை உள்ளது. சில மாதங்களுக்கு முன், கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.72 ஆயிரம் மற்றும் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 80 கிலோ செம்பு பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக,  செய்யாறு போலீசில் கடையின் உரிமையாளர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.



மேலும் இரும்பு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் 4 பெண்கள் கடைக்கு வந்து முன்பக்க கதவின் பூட்டை திறக்க முயற்சித்து முடியாமல் போக ஒரு பெண்ணை மண்டியிட்டு அமரவைத்து மற்றொரு பெண் அவர்மீது ஏறி கதவின் மேல்பகுதி இடைவெளி வழியாக கடைக்குள் குதித்து உள்ளே இருந்த பொருட்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் போலீஸ் தனிப்படையினர் சாலையில் இருந்த மற்ற கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.

அதன்படி வேலூர் கோட்டை பின்புறம் சம்பத் நகரை சேர்ந்த இந்து (வயது 30) மற்றும் இளவரசி (37) ஆகிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வேலூரில் ஒரே பகுதியை சேர்ந்த 4 பேரும் லோடு ஆட்டோவில் வந்து திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பெண்கள் மற்றும் லோடு ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதியது பழையவை