முக்கியச் செய்திகள் (25-12-2024) | Vandavasi News


 

கேஸ் அடுப்பு வெடித்து தீ.. பெண் காயம் 

வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தை சேர்ந்த ராணி (வயது 65) என்பவர், கேஸ் அடுப்பை பற்ற வைத்தபோது, அடுப்பில் தீ பற்றியதும், எதிர்பாராதவிதமாக ஆடையில் தீப்பற்றி எரிந்தது. இதனால் வலி தாங்காமல் வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. தீக்காயம் அடைந்த ராணி சிகிச்சைக்காக தேசூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.


இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான இளைஞர்

வந்தவாசியை அடுத்த விளாநல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (வயது 30) என்பவர் இளம்பெண் ஒருவரை  காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணிடம் அடிக்கடி கட்டாயப்படுத்தி தனிமையில் இருந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் கர்ப்பம் கலைவதற்கு மாத்திரை சாப்பிட்டதால், அந்த பெண்ணிற்கு ரத்தப்போக்கு அதிகமானதாக தெரிகிறது .   சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலை மறைவாக உள்ள பிரசாந்த்தை தேடி வருகின்றனர்.


வந்தவாசி அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் 

வந்தவாசியை அடுத்த பொன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்பாள், குப்புசாமி தம்பதி .  அந்த கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் அருகில் சாலையோரம், ராஜம்பாள்  முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது கணவர் குப்புசாமி, பெயிண்டர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. மது அருந்தும் பழக்கம் கொண்ட குப்புசாமி நேற்று முன்தினம் 2 மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு வந்து முறுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த ராஜம்பாள் அருகில் அமர்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பொன்னூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, குப்புசாமி கைகளில் மதுபாட்டில்கள் இருப்பதை கண்டு மது விற்கிறாயா? என்று கேட்டு குப்புசாமியை தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற ராஜம்பாளையும் தாக்கியுள்ளார். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மதுபாட்டில்களையும், 500 ரூபாயையும் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த குப்புசாமி, ராஜம்பாள் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதனையடுத்து ராஜம்பாள் வந்தவாசி டிஎஸ்பி அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மீது புகார் அளித்தார். தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி  உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

புதியது பழையவை

பிரபலமான பதிவுகள்