வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பாதிரி கிராமத்தில் இரண்டாவது முறையாக கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்

வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாதிரி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, பாதிரி ஊராட்சியை வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் ப.பரணிதரன் முன்னிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் பாதிரி ஊராட்சியில் மீண்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஆனால், அங்கு வந்த கிராமமக்கள் பாதிரி ஊராட்சியை வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கூட்டத்தை புறக்கணிப்பதாக எதிர்ப்பு தெரிவித்துவிட்டு கிராமமக்கள் புறப்பட்டு சென்றனர்.


இதேப்போன்று , செய்யாறு ஒன்றியம் , தென்தண்டலம் கிராம மக்கள் தங்கள் கிராம ஏரிக்கு செய்யாறு ஆற்றிலிருந்து நீர்வரும் நீர்வரத்து கால்வாயில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் நடத்த முடியாமல் போனது.

அதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் மறு கிராமசபை கூட்டம் நடத்த ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டு பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடத்த ஊராட்சித்துறை அலுவலர், பொதுப்பணித்துறை அலுவலர், வருவாய்த்துறை அலுவலர் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் உள்ளிட்டோர் காத்திருந்தனர்.

ஆனால் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கூடி எங்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணாமல் கிராம சபை கூட்டம் நடத்தக்கூடாது என்றும் தாங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்றும் கூறி கிராம சபை கூட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இரண்டாவது முறையாக கிராமசபை கூட்டம் நடத்த முடியாமல் போனது.

புதியது பழையவை

பிரபலமான பதிவுகள்