திருவண்ணாமலை மாவட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
தமிழக அரசால் ஒருமுறை பயன்பாடுள்ள 28 வகை உணவுப் பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தேநீர் குவளைகள், தெர்மாக்கோல் குவளைகள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலை மூடவும், மின்சாரத்தை துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிற மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் கடைகளில் விற்பனை செய்யும் பிளாஸ்டிக் பொருட்களும் கைப்பற்றி அபராதம் விதிப்பதோடு கடைகளை மூடி ‘சீல்’ வைக்கப்படும். இதற்காக நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் மூலம் அடிக்கடி கடைகளில் சோதனை நடத்தப்படும்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனைத்து கடைகளிலும் மக்கள் பார்வையில் படும்படி துணிப்பைகள் விற்பனைக்கு வைக்க வேண்டும்.
கோவில் நகரமாகிய திருவண்ணாமலையில் ஒருமுறை பயன்பாடுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதன் மூலம் பிளாஸ்டிக் குப்பைகள் உருவாகுவதை தவிர்த்து தூய்மையான நகரை உருவாக்க பொது மக்களும், அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். எனவே முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ள படி அனைவரும் மஞ்சப்பை உபயோகித்து ஒத்துழைப்பு தர வேண்டும்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். எனவே திருவண்ணாமலையை பிளாஸ்டிக் குப்பைகள் இல்லா நகராக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.