வந்தவாசியில் நூலகம் எங்கு இருக்கு தெரியுமா..?
இந்த கேள்விக்கு நம்மில் பல பேருக்கு விடை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. சிலருக்கு நூலகம் ஒன்று இருக்கிறதா..? என்கிற கேள்வியும் எழுந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இன்றைய ஸ்மார்ட்போன் காலத்தில், ஸ்மார்ட்டாக எல்லாவற்றையும் இணையத்தில் அறிந்துகொள்ளலாமே.. இன்னமுமா நூலகம் தேடி செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டாலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
ஆனால், வாசிப்பு பழக்கம்தான் சொல்வளத்தையும், அறிவுசெல்வத்தையும் மூளைக்கு ஏற்றிவிடும் அரிய செயலை செய்கிறது.
இணையத்தில் கிடைக்காத பல தகவல் களஞ்சியங்கள், இலக்கியங்கள், சிந்தனைகள் நூலகங்களில் தான் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
எல்லாவற்றையும் வாங்கி படித்துவிட முடியாது என்பதால்தான், நூலகங்கள் நமக்கு பணம் கொடுத்து வாங்காமலே, அறிவுச்செல்வத்தை பெற பேருதவியாக இருக்கின்றன.
இத்தகைய நூலகங்களையும், அங்கு சென்று படிக்கும் பழக்கத்தையும் இன்றும் நம் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் சொல்லி கொடுக்க வேண்டியுள்ளது.
நாலாப்பக்கம் சுற்றிவந்த நூலகம்
அத்தகைய அறிவுக்கோவிலான நூலகம், வந்தவாசி நகரத்தில், கடந்த 65 ஆண்டுகளாக மூலைக்கு மூலை இடம் மாற்றிக் கொண்டு, இப்போது யாருக்கும் தெரியாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சொந்த கட்டடம் இல்லாமல், தவியாய் தவிக்கும் நூலகம் தற்போது புதிய பேருந்து நிலைய கட்டடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. ஆம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
பள்ளி மாணவ மாணவிகள் மாலை நேரம் வகுப்புகள் முடித்து, நூலகம் சென்று வரலாம் என்றால், ஆள் நடமாட்டமற்ற மயான களத்தில் பயத்தோடுதான் சென்று வர வேண்டிய அவலம்.
இதனாலயே மாணவர்கள் இந்த பக்கம் வருவதில்லை.
இன்னொன்று, ஆயிரக்கணக்கான வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ள இந்த நூலகத்தில், புத்தகங்களை வகைவாரியாக பிரித்து பராமரிக்கவும், விநியோகிக்கவும் நூலகர் பற்றாகுறையும் உள்ளது.
கணினி, இணைய வசதியும், அச்சு எடுக்கும் கருவிகளும் இருந்தும் பயன்படுத்தாத நிலை.
வாசிப்பை விட்டுவிடாத பெரியவர்களும், சில இளைஞர்களும், போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் தேர்வர்களும் தான் நூலகத்திற்கு வந்து செல்லும் ‘வாடிக்கை’யாளர்களாக உள்ளனர்.
என்ன செய்ய வேண்டும்?
பத்தாண்டுகளுக்கு முன்னர், வந்தவாசி நகராட்சியின் சார்பில் 10 செண்ட் இடம் ஒதுக்கீடு செய்து தர நகரமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால், இன்னமும் இடத்தை ஒதுக்கீடு செய்யாமல், புதிய பேருந்து நிலைய கட்டடத்தில் நிறுத்திவிட்டார்கள்.
நகர் பகுதியில், நல்லுள்ளம் படைத்தோர் குறைந்தது 5 செண்ட் நிலமோ, வாடகை கட்டடமோ கொடுத்தால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் நூலகம் அமையப்பெறும் என்பது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
வந்தவாசி பகுதியில், நகராட்சி அலுவலகம், உழவர் சந்தை, அம்மா உணவகம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காலி இடங்களை ஒதுக்கீடு செய்து கொடுத்து நூலக கட்டடம் கட்டலாம் என்பது பொதுமக்களின் பரிந்துரையாக உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி மன்றம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், தமிழ்ச்சங்கம், உள்ளிட்ட தொண்டு அமைப்புகள் மேற்படி நூலகம் நகரின் பிரதான பகுதியில் அமைந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது வேண்டுகோளாக உள்ளது.
இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் வந்தவாசி பகுதியில் நூலக கட்டடம் அமைய பரிந்துரைத்தால், உதவி செய்ய நினைத்தால் கமெண்ட் பெட்டியில் குறிப்பிடலாம்.