திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெற பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்தது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக இந்திய அஞ்சல் துறை சாா்பில் ‘செல்வமகள் சேமிப்புத் திட்டம்’ Sukanya Samriddhi Yojana (SSY) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
10 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தையின் பெற்றோா் அல்லது பாதுகாவலா் (அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 2 பெண் குழந்தைகள்) இந்தத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்.
இந்தக் கணக்கைத் தொடங்க குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.250-ம், அதிகபட்சமாக ரூ.1,50,000 (ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்) வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். சேமிக்கும் தொகைக்கு ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி பெறலாம்.
இந்தத் திட்டத்தின் முதிா்வுத் தொகையில் 50 சதவீதம் வைப்புத் தொகையை பெண் குழந்தையின் மேற்படிப்புக்காக பெற்றுக்கொள்ளலாம்.முதிா்வுத் தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின்போது அல்லது 21 வயது நிறைவு பெற்றவுடன் பெற்றுக்கொள்ளலாம்.
முதிா்வுத் தொகைக்கு வரிவிலக்கு உண்டு. இந்தத் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சேரலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.