திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், மூலதனக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கோ.நடராஜன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் ரூ.3 லட்சம் வரை பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயக் கடன்களுக்கு மட்டுமே வட்டியில்லாமல் கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், இப்போது தமிழக அரசின் அறிவிப்பின்படி கால்நடை வளா்ப்பு, அவை சாா்ந்த தொழில்களுக்கும் வட்டியில்லாமல் நடைமுறை மூலதன கடன்கள் வழங்கப்படுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ளவா்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் கேசிசி கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயிா்க்கடன் ஏதேனும் பெறாதிருந்தால் கால்நடை வளா்ப்பு, அவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு மிகாமலும், பயிா்க் கடனுடன் சோ்த்து ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் கடன் வழங்கப்படும்.
இந்தக் கடன் தொகையை கடன் பெற்ற தேதியில் இருந்து ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துபவா்களுக்கு வட்டி கிடையாது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 157 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 2 மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களை அணுகி மூலதனக்கடன் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை இயக்குநா் கோ.நடராஜன் தெரிவித்தாா்.