புதிய விவசாய தொழில் நுட்பங்களையும், புதிய எந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதியுடைய போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் விவசாயி முதலில் செல்போனில் உழவன் செயலி மூலமாக தனது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை அல்லது துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
பின்னர் கட்டணம் செலுத்திய ரசீதுடன் விண்ணப்பப் படிவத்தினை இணைத்து வேளாண்மை உதவி இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தேர்வு குழுக்களால் தேர்வு செய்யப்பட்ட பின் மாநில தேர்வு குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும்.
அதன்பின்பு விண்ணப்பங்கள் மாநில குழுக்களால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும், புதிய வேளாண் எந்திர கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 18-ந்தேதியுடன் முடிவடைய இருப்பதால் தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் தெரிவித்து உள்ளார்.